பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 30

பயில்வோம் பங்குச்சந்தை பாகம் 30


             TECHNICAL ANALYSIS இல் பார்க்க வேண்டிய விசயங்களில் அநேகம் உண்டு, இருந்தாலும் தடை இன்றி வர்த்தகம் செய்வதற்கும், புதிதாக ஒரு பங்கை தேர்ந்தேடுப்பதற்க்கும், அந்த பங்கின் இலக்கு என்ன என்பதை காண்பதற்க்கும், தொடர்ந்து சக்தியுடன் ஏறுமா, இல்லை இறக்கம் இருக்குமா, என்பதை கண்டு வர்த்தகம் செய்து நிறைவாக இருப்பதற்கும் நாம் இது வரை பார்த்து வந்த விஷயங்கள் போதுமானதாக இருக்கும்,

இருந்தாலும் உங்களுக்கு பயிற்சி ஏற்பட ஏற்பட மேலும் புதிய விசயங்களை நீங்கள் தேட ஆரம்பிப்பீர்கள், அப்பொழுது உங்களின் தேடல் அநேக பலன்களை தரும், நாம் 21 ஆம் நூற்றாண்டில் இருக்கின்றோம், மேசையை விட்டு நகராமலே உலகில் இருக்கும் அனைத்து விசயங்களையும் வலை தளங்களின் மூலம் எடுத்து விடலாம்,

சரி நாம் பயின்ற மேற்கண்ட அனைத்து பாகங்களில் இருந்தும் முக்கியமான விசயங்களை எப்படி எல்லாம்  பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்பதினையும், அனைத்து விசயங்களையும் தொகுப்பாக ஒரு பங்கினை தேர்ந்தெடுக்க எப்படி பயன்படுத்த வேண்டும்  என்பதினையும் பார்ப்போம், அப்பொழுது தான் இந்த செயல் முழுமை பெரும்,

பொதுவாக ஒரு பங்கினை பற்றி முழுமையாக  நாம் அறிந்து கொள்ள கண்டிப்பாக ஏதாவது ஒரு கண்ணுக்கு தெரிந்த வடிவம் வேண்டும், அந்த வடிவம் வரைபடங்களே, ஆகவே CHART எனப்படும் வரைபடங்கள் இல்லாமல் ஏதும் செய்ய முடியாது, அதிகமான நபர்கள் வலை தளங்களில்  EOD DATA கொடுக்கின்றார்கள், இதற்காக செலவு செய்வது ஞாயமான செயல் தான், நாம் தங்குவதற்கு வீடு கட்டுவதை யாரும் செலவு என்று எண்ணுவோமா, ஆகவே இந்த CHART DATA வாங்குவது அதி முக்கியம், இலவசமாக கூட கிடைக்கலாம் அதை வலை தளங்களில் தேடுங்கள்,   அடுத்து

பொதுவாக நாம் ஒரு பங்கினை தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்போம்

அதாவது நாம் வர்த்தக பயணம் மேற்கொள்ள வர்த்தகம் செய்யும் போது ஒன்று பங்குகளை  வாங்கி  லாபத்தில் விற்ப்போம், அல்லது விற்று பிறகு லாபத்தில் வாங்குவோம், இது முழுமையாக தின வர்தகத்திற்க்காகவும், FUTURE CONTRACT எனப்படும் F&O என்ற வர்தகத்திர்க்காகவும் பயன்படுத்துவோம்,

அதே நேரம்  DELIVERY எனப்படும் முறையில் பங்குகளை வாங்கி  சிறிது  நாட்கள் கழித்து நாம் எதிர்பார்த்த இலக்குகள் வந்தவுடன் நமது கை இருப்புகளை லாபத்தில் விற்ப்போம், இதற்க்கு POSITIONAL TRADE, SWING TRADE, SHORT TERM TRADE, LONG TERM TRADE என்று நாம் பங்குகளை வைத்து இருக்கும் நாட்களின் அடிப்படையில் பெயர் வைத்துக்கொள்ளலாம், ஆனால் இங்கு அனைவரின் நோக்கமும் லாபம் மட்டுமே,

இது போன்ற அனைத்து விதமான வர்த்தகங்களுக்கும் லாப சூட்சுமங்கள் நாம் பங்குகளை தேர்ந்தெடுப்பதில் தான் இருக்கிறது, பொதுவாக நாம் தேர்ந்தெடுக்கும் பங்குகளின் நகர்வுகளை பொறுத்து மேலே சொன்ன என்ன விதமான வர்த்தகங்களில் நாம் ஈடுபடப்போகிறோம் என்பது வெளிச்சத்திற்கு வரும், நாம் தினவர்த்தகம் செய்தாலும், அல்லது நீண்ட நாட்களுக்கு உரிய வர்த்தகம் செய்தாலும் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று அநேகம் உள்ளன அவைகளை பற்றி தான் இப்பொழுது பார்க்கப்போகிறோம்,

பங்குசந்தைகளில் வர்த்தகம் செய்வது என்பது ஒரு பேரூர்ந்தில் பயணம் செய்வதற்கு சமம், பொதுவாக நாம் திருச்சியில் இருந்து ஒரு 30 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்க்கு உரிய TOWN BUS இல் செல்வோம் இல்லையா, இது தான் இந்த குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும் பேரூர்ந்தை தேர்ந்து எடுப்பது தான் நமது பயணத்தின் ஆடி அந்தமே உள்ளது,

எப்படி நமக்கான  பேரூர்ந்தை தேர்ந்தெடுப்பது அவசியமோ, அதே போல் நாம் வர்த்தகம் செய்வதற்கு சரியான  பங்கை தேர்ந்தெடுப்பதும் அவசியம், எண்ணி பாருங்கள் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்லாத  பேரூர்ந்தில் ஏறினால்  என்ன ஆகும், நமது பயணம் கேள்விக்குறியாகும்! என்ன காரியத்திற்காக நாம் இந்த பயனத்தை ஆரம்பித்தோமோ அந்த விஷயம் தடைபடும், முழுவதும் வீணாகி நமக்கு Tension வருவது தான் மிஞ்சும்,

இதே போல் தான் தவறான பங்குகளை நாம் தேர்ந்தெடுத்து வர்த்தகம் செய்தால் என்ன ஆகும், ஆகவே இந்த முக்கியமான சூட்சுமங்களை நாம் வெற்றிகரமாக எதிர்கொண்டால் தான் நமக்கு வெற்றி என்பது சாத்தியமாகும், சரி இன்னும் விரிவாக பார்ப்போம்

முதலில் பங்குகளின் நகர்வுகள் எப்பொழுதும் ஒரு வடிவத்தின் வழியாக கிடைக்கும் Break out  எனப்படும் செயல் நடப்பதினால் தான் நடந்தேறும், இதன் மூலமே அந்த பங்கு சென்றடைய வேண்டிய இலக்குகள் என்ன என்பதினை நாம் அறியலாம். ஆகவே நாம் நமது வர்த்தகத்திற்கு தேவையான பங்குகளை தேர்ந்தெடுப்பதற்கு இந்த வடிவங்களை தான்  பயன்படுத்த வேண்டும், அப்பொழுது தான் நன்றாக  நகரக்கூடிய பங்குகள் எது என்பதை  நாம் அடையாள காணலாம்,

இவ்வாறு வடிவங்களை அடையாளம் காண  நாம்  நமது Charting s/w ஐ பயன்படுத்தி வருசயாக பங்குகளை பார்த்துக்கொண்டே வர வேண்டும், எந்த பங்கில் என்ன விதமான வடிவங்கள் உள்ளது என்பதினை அடையாளம் கண்டு, அந்த பங்கு எப்பொழுது Break out என்ற நிலையை அடையும், அதற்க்கு உண்டான Break out point என்ன என்பதினை கண்டு பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும்,

பிறகு இவ்வாறு break out என்ற  நிலையினை  அடைந்த  பின்பு  தொடர்ந்து  ஏறுவதற்கு  உரிய  சக்திகள்  இந்த  பங்கில்  உள்ளதா, என்பதினை நாம் முன்னர் பார்த்த Indicator களை பயன்படுத்தி தெளிவு பெறவேண்டும், அதில் சாதகமான விஷயம் கிடைத்த பிறகு, அந்த பங்கிற்கு ஏதும் சாதகமான அல்லது பாதகமான செய்திகள் உள்ளதா என்பதினை வலை தளங்களில் தெரிந்து கொள்வதும் நல்லது,

மேலும்   தொடர்ந்து அந்த பங்கில் volume எவ்வாறு நடந்து வருகிறது என்பதினை உற்று நோக்க வேண்டும், volume  மிக அதிகமாக நடந்து கொண்டே இருந்தால் அதன் பலம் அதிகம்,  இந்த volume ஐ  நாம் கண்காணிப்பதன் மூலம் அநேக நன்மைகளை அறியலாம், இது அணைத்து indicator களையும் விட தலை சிறந்தது, அடுத்து இந்த volume நல்ல நிலையில் இருந்து, indicator கள்  எல்லாம் சாதகமாக இருந்து, break out என்ற நிலையினையும் எட்டி விட்டால்,

சந்தேகமே வேண்டாம் அன்றே ஒரு மிகப்பெரிய உயர்வை இந்த பங்கு கொடுக்கும், மேலும் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட வடிவத்தின் இலக்குகளை அடைய பயணிக்க ஆரம்பிக்கும், இவ்வாறுதான் நாம்  பங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும், அவ்வாறு தேர்ந்தெடுத்த பங்கின் வகையில் உள்ள மற்றைய (same sector scripts) பங்குகளின் நிலை என்ன என்பதினையும் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும்,

அடுத்து நமது வர்த்தகம் எந்த வகையை சேர்ந்தது என்பதினையும் முதலில் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும், அதாவது நீங்கள் தின வர்த்தகராக இருந்தால் இது போன்ற break out  பெற்ற  பங்குகளை வர்த்தகம்  செய்து                  குறிகிய லாபத்துடன் வெளியேறுதல் வேண்டும், அதாவது உங்களுக்கு ஒரு நாளைக்கு எவளவு லாபம் ஈட்ட வேண்டும் என்று எண்ணம் இருக்கின்றதோ அதற்க்கு தகுந்தார்ப்போல் வர்த்தகம் செய்ய வேண்டும்,

இன்னும் தெளிவாக சொல்லவேண்டும் என்றால் திருச்சிக்கு அடுத்து ஒரு 30 கிலோ மீட்டரில் உள்ள ஊருக்கு செல்ல அதற்க்கு உரிய Town Bus ல்  செல்லலாம், அதே நேரம் சென்னை செல்லும் விரைவு பேரூர்ந்திலும் செல்லலாம், சென்னை Bus இல் சென்றால் விரைவாக செல்ல முடியும், எந்த தங்கு தடையும் இருக்காது,

அதே நேரம் Town Bus இல் சென்றால் நீங்களே யோசித்து பாருங்கள், town bus இல் செல்வது என்பது வெறும்  Intra day chart ஐ மட்டும் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது போல, அதே நேரம் EOD chart ஐ பயன்படுத்துவது சென்னை bus இல் செல்வது போல, எதில் அதிக வசதி இருக்கும்,

ஆனால் இந்த சென்னை  Bus இல் சென்றால் Ticket இன் விலை அதிகமாக தான் இருக்கும், அது போல EOD CHART இல் பங்குகளை கண்டறிவது கொஞ்சம் உழைத்தால் தான் கிடைக்கும், நீங்கள் home work செய்ய தயாரானால் பின்பு சென்னை Bus இல் வர்த்தகம் செய்யலாம், நீங்களே முடிவு செய்யுங்கள், நெரிசலில் சிக்கி நின்று! நின்று செல்லும் town bus வர்த்தகம் வேண்டுமா, அல்லது  அனைவருக்கும் இடம் கிடைத்து மிக விரைவாக செல்லும் சென்னை bus வர்த்தகம் வேண்டுமா,    அடுத்து

நீங்கள் வாங்கி வைத்து லாபம் பார்க்கும் வர்த்தகம் செய்தால் (DELIVERY) அந்த பங்கின் இலக்குகள் அடையும் வரை பொறுத்து இருந்து இலக்குகள் வந்த வுடனோ அல்லது அதன் அருகில் வந்தவுடனோ உங்கள் லாபங்களை உறுதி செய்து கொள்ளுங்கள், மேலும் அடுத்து எந்த பங்கில் வர்த்தகம் செய்யலாம் என்பதினையும் முடிவு செய்து இந்த பங்கில் இருந்து வெளியேறுங்கள்,

அதோடு தற்பொழுதைய சந்தைகளின் நிலை என்ன ஏதும் தடைகளில் உள்ளதா, அல்லது தொடர்ந்து ஏறுமா என்பதினையும் கவனிக்க வேண்டியது முக்கியம், இவ்வாறெல்லாம் நீங்கள் யோசித்து ஒரு பங்கை தேர்ந்தெடுத்தால் நட்டங்கள் என்பது நமக்கு நேராது,
                               
அடுத்து தின வர்த்தகத்திற்கு எப்படி தயாராக வேண்டும் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்:
     
பொதுவாக எந்த ஒரு செயலுக்கும் முன்னேற்ப்பாடு  என்பது முக்கியம், அடுத்து இயற்கையாகவே நமக்கு இந்த முன்னேற்ப்பாடு செய்யும் பழக்கம் உள்ளது, காலையில் எழுவதில் இருந்து  இரவு உறங்கும் வரை நாம் செயயும்  ஒவ்வொரு செயலுக்கும் சில முன்னேற்ப்பாடுகளை செய்வோம், இன்னும் சொல்ல வேண்டுமானால் தூங்குவதற்கு முன் BED SPREAD விரிப்பது, போர்வைகளை சரி படுத்திக்கொள்வது,  A.C போட்டு கொள்வது, என்று நிம்மதியான உறக்கத்திற்கு முன்னேற்ப்பாடு செய்கிறோம் இல்லையா,

அது மாதிரி தான்!  ஆனால் இந்த பங்கு வர்த்தகத்திற்கு மட்டும் பெருவாரியான வர்த்தகர்கள் தயாராவதே இல்லை, அது ரொம்ப முக்கியம், ஒன்றுமே தெரியாத வர்த்தகர்கள் கூட சில அடிப்படை தகவல்களை சேர்த்து கொண்டு தான் தின வர்த்தகத்திற்கு  செல்ல வேண்டும் அது மாதிரியான விசயங்களை பற்றி கொஞ்சம் பார்த்து விடுவோம்
 
முதலில் அன்றன்றைய தின நகர்வுகளை முடிவு செய்வது நமது NIFTY மற்றும்  SENSEX ஆகிய குறியீடுகளின் அன்றன்றைய SUPPORT மற்றும்   RESISTANCE புள்ளிகள் தான், இருந்தாலும் உலக சந்தைகளின் போக்குகளும் நம்மை வெகுவாக பாதிக்கும்,  இன்னும் எளிதாக சொல்ல வேண்டும் என்றால் நாம் பயணம் செய்யும் வழியில் ஏதாவது ஒரு அசம்பாவீதம் நடந்து இருந்தால் நமது பயணமும் அங்கு சற்று தடைபடும் இல்லையா! அதே போன்றுதான்,

ஆகவே செல்லும் வழி எவ்வாறு உள்ளது என்பதினை தெளிவாக தெரிந்து கொள்ள  நாம் உலக சந்தைகளின் நிலைகளை தெரிந்து கொள்வது அவசியம் அந்த வகையில் சில முக்கியமான விசயத்தி பற்றி பார்ப்போம்,

இந்த பங்கு சந்தைகளுக்கு எல்லாம் அண்ணனாக விளங்கும் அமெரிக்க சந்தைகள் அனைவருக்கும் முன்னோடியாக வழிகாட்டியாக விளங்குகிறது, ஏனெனில் மிக பழமையான பங்கு சந்தை வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த அமெரிக்க சந்தைகள், அந்த வகையில் அமெரிக்க சந்திகளின் நிலை என்ன, அவைகளின் முதல் நாள் முடிவு எப்படி உள்ளது என்பதினை நாம் பார்க்க வேண்டும்,

அதன் படி அவர்கள் உயரத்தில் முடிந்து இருந்தாலும் அல்லது வீழ்ச்சி அடைந்து இருந்தாலும், அவர்களின் வரைபடங்களை வைத்து இந்த வீழ்ச்சி அல்லது உயர்வு தொடர்ந்து என்ன மாதிரியான செயல்பாட்டை அவர்களுக்கு  ஏற்படுத்தும் என்பதினை கவனிக்க வேண்டும், ஏனெனில் முதல் நாள்  உயர்வில் முடிந்து இருந்தாலும் TECHNICAL CHART இன் படி அது சரியான தடை புள்ளியாக இருந்தால் தொடர்ந்து சரிவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்,

அதே போல் வீழ்ச்சி அடைந்து இருந்தாலும் அது சரியான SUPPORT புள்ளியாக இருக்கலாம், ஆகவே அவர்களின் உண்மையான நிலை என்ன என்பதினை அவர்களின் TECHNICAL CHART இன் துணை கொண்டு அறிந்து கொள்ள வேண்டும், பிறகு அமெரிக்க சந்தைகளின் 24 மணி நேர வர்த்தகமான FUTURE சந்தைகள் நமது கணிப்பின் படி செயல்படுகிறதா என்பதினையும் கவனிக்க வேண்டும்,

பிறகு இதன் வெளிப்பாடு ஆசிய சந்தைகளில் எப்படி எதிரொலிக்கிறது  என்பதினையும் பார்த்து கொள்ளவேண்டும், இங்கு எப்படி செயல்பாடு இருக்கின்றதோ! அதே நிலை நமது சந்தைகளுக்கும் ஏற்படலாம், அடுத்து நாமது XEROX COPY யான SINGAPORE NIFTY யின் நிலை என்ன என்பதினை பார்த்து, நமது சந்தை இன்று இப்படி தான் செயல்படும் என்ற ஒரு முடிவுக்கு வரலாம்,

இது ஒரு 60% அனுமானமே, அடுத்து நமது சந்தை தொடங்கியவுடன் நமது அனுமானம் சரியாக உள்ளதா என்பதினை பார்த்து, சரியாக இருந்தால் தொடர்ந்து நமது வர்த்தக நிலைகளை எடுக்கலாம், அதே நேரம் அதற்க்கு எதிர்பதமாக இருந்தால், சற்று பொறுமையுடன் இருந்து சரியான பாதை என்ன என்பதினை தெளிவு படுத்திய பிறகு வர்த்தகம் செய்யலாம், இறுதி வரை சந்தையின் கோணம் தெளிவாக நமக்கு புடி படவில்லை என்றால் வர்த்தகம் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது,

அடுத்து நீங்கள் தேர்ந்து எடுத்து இருக்கும் பங்குகளை சற்று கவனித்து, நீங்கள் வர்த்தகத்திற்காக எடுத்து இருக்கும் BUY ABOVE மற்றும்  SELL BELOW  புள்ளிகளை அந்த பங்கு எவ்வாறு கையாளுகிறது என்பதினை ஆய்ந்து வர்த்தகத்தை தொடங்கலாம்,

அதோடு மிக முக்கியமாக  சந்தையின் போக்கை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக RELIANCE INDUSTRIES என்ற பங்கு இருப்பதால், உங்களின் ஒவ்வொரு வர்த்தகத்தின்  பொழுதும் RIL பங்குகளின் நிலை என்ன, அதாவது தொடர்ந்து உயரும் வாய்ப்புகளில் உள்ளதா அல்லது தொடர்ந்து இறங்கும் நிலையில் உள்ளதா என்பதினை தெரிந்து கொண்ட பின்பு தான் வர்த்தகம் செய்ய வேண்டும்,

ஏனெனில் RIL பங்குகள் தன்னிச்சையாக நின்று சந்தையின் போக்குகளையே மாற்றி விடும் சக்தியை பெற்றது என்பது நாம் அறிந்ததே, அதே போல் இதனுடன் NIFTY யின் நிலையையும் கணித்து கொண்டே இருக்க வேண்டும், இந்த இரண்டு விசயங்களும் உங்களின் வர்த்தக பாதைகளிலே இருந்தால் உங்களுக்கு வெற்றி தான், இதே போல் தான் நீங்கள் தின் வர்த்தகத்திற்கு தயாராக வேண்டும், இப்படியே தொடர்ந்து செய்து வாருங்கள் தொடக்கத்தில் சற்று சிரமங்கள் இருக்கலாம், போக போக சந்தையின் போக்குகள் எளிதாக் உங்கள் கைகளில் வந்து விடும், வாழ்த்துகள்

கடந்த 30 வாரங்களாக நாம் பார்த்து  வந்த பயில்வோம் பங்கு சந்தை இனிதே முடிவடைகிறது, இந்த செயல்பாட்டிற்க்காக எனக்கு உருதுணையாக இருந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன், 4TMEDIA வலைதல உரிமையாளர்களுக்கு என் மன மார்ந்த நன்றி, வாழ்க தமிழ்! வளர்க்க பங்கு சந்தை !