அட்சயபாத்திரமாய் தித்திக்கும் அதிசய தீர்த்தம்!

போடி அருகே கோடாங்கிபட்டி விருப்பாட்சி ஆறுமுக நாயனார் கோயில் முன்பு ஆண்டு முழுவதும் அட்சய பாத்திரமாய் கொட்டிக்கொண்டிருக்கிறது அதிசய தீர்த்தம். இங்கு ஆறுமுக நாயனார், மயில் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த இடத்தில் ஆறுமுகனின் அதிசயத்தால் காலமெல்லாம் வற்றாத அட்சய பாத்திரமாய் கொட்டுகிறது ஊற்று நீர். இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஆறுமுக நாயனார் திரு உருவச் சிலையை பிரதிஷ்டை செய்ய அஸ்திவாரம் தோண்டிய போது, கர்ப்ப கிரகத்திலிருந்து தண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது. அன்று முதல் இன்று வரை ஒரே சீராக தண்ணீர் பொங்கி வழிகிறது. இந்த தீர்த்த நீர் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது, என பல ஆராய்ச்சியாளர்கள் பலதரப்பட்ட ஆய்வுகளை நடத்திவிட்டனர். எந்த விடையும், இதுவரை கிடைத்தபாடில்லை.

அருகில் உள்ள கொட்டக்குடி ஆறு, தாழ்வான இடத்தில் தான் உள்ளது. மழைக் காலத்தில் மட்டுமே ஆற்றில் நீர் வரும், மற்ற நாட்களில் வறண்டே காணப்படும். மேடான பகுதியில் இருக்கும் இந்த தீர்த்த தொட்டியில்இருந்து மழைக் காலம், கோடை காலம் என்றில்லாமல் எப்பொழுதும் ஜில்லென்று நீர் வந்துகொண்டிருக்கிறது. கோயில் பூஜாரி பசவலிங்கம் கூறுகையில், கடந்த 2005ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவியபோதும், அதிசயத்தக்க வகையில் தீர்த்தம் வந்து கொண்டிருந்தது. வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து நீராடி, ஆறு வணங்கிச் செல்கின்றனர், என்கிறார். ஐயப்ப பக்தர்கள் மாலையிட்டு, இங்கிருந்து விரதத்தை தொடங்குகின்றனர். தேனி வழியாக சபரிமலை செல்லும் பக்தர்கள், இரவு நேரத்தில் இங்குள்ள மண்டபத்தில் தங்கி அதிகாலையில் தீர்த்தநீராடி ஆறுமுகனை தரிசித்து செல்கின்றனர். தோஷங்கள் நீங்கவும், சரும வியாதிகள் நீங்கவும் பலர் வந்து நீராடுகின்றனர்.
text=adstext=ads