போகர் வரலாறு



போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது. மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான். அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.

சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...! அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள். ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள். ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர். உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால் பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும். உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர். மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர். தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம். இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான். பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை.

ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம். பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது. இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார். போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்
text=adstext=ads